/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரிக்கை 22 கவுன்சிலர்கள் கமிஷனரிடம் மனு
/
கம்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரிக்கை 22 கவுன்சிலர்கள் கமிஷனரிடம் மனு
கம்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரிக்கை 22 கவுன்சிலர்கள் கமிஷனரிடம் மனு
கம்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரிக்கை 22 கவுன்சிலர்கள் கமிஷனரிடம் மனு
ADDED : செப் 11, 2025 07:04 AM
கம்பம் : கம்பம் நகராட்சி தலைவர் வனிதா, துணைத் தலைவர் சுனோதா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர 22 கவுன்சிலர்கள் இணைந்து கம்பம் நகராட்சி கமிஷனரிடம் நேற்று மனு அளித்தனர்.
இந்நகராட்சி தலைவராக வனிதா (தி.மு.க.,) உள்ளார். துணைத் தலைவராக சுனோதா (தி.மு.க.,)உள்ளார். நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க., 25, அ.தி.மு.க., 7, காங்., 1 என, 33 கவுன்சிலர்கள் உள்ளனர்.
நகராட்சி தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு இருந்தது. இதனால் கட்சி மேலிட பார்வையாளர் சமாதானம் செய்து வைத்தார். அதற்கு பின்பும் இரு குழுக்களாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த முறை நடந்த கவுன்சில் கூட்டத்தில் மோதல் உச்ச கட்டத்தை எட்டியது. கூட்டத்தை நடத்த விடாமல் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை தி.மு.க. கவுன்சிலர்கள் 16, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் இணைந்து மொத்தம் 22 கவுன்சிலர்கள் நகராட்சி கமிஷனர் உமா சங்கரை சந்தித்து, தலைவர், துணைத் தலைவர் மீது, 'நம்பிக்கையில்லா தீர்மானம்' கொண்டு வர கடிதம் அளித்தனர்.
கவுன்சிலர்கள் அளித்த மனுவில், ''வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடக்க வில்லை. 33 வது வார்டில் பின்தங்கிய மக்கள் வசிக்கின்றனர். அங்கு எந்த பணியும் செய்ய மறுக்கின்றனர். நகராட்சியில் முறைகேடுகள் நடக்கின்றன. தலைவரின் கணவர், நகராட்சி நிர்வாகத்தில் குறுக்கீடு செய்கிறார். நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் செயல்படுகின்றனர். ரத்த சொந்தங்களுக்கு மின் மயான பழுது வேலை, ஒப்பந்தப் பணிகளை வழங்கி தரமற்ற பணிகள் நடக்கின்றன. வார்டுகளில் ஏற்படும் குறைகளை கூறினால் செய்து தர மறுக்கின்றனர். பெண் கவுன்சிலர்களை ஒருமையில் பேசுகின்றனர்., இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
நகராட்சி தலைவர் கூறியதாவது: கவுன்சில் பதவியேற்று 3 ஆண்டுகளை கடந்துள்ளது. எங்கள் மீது இதுவரை பொது மக்களோ, எந்த ஒரு அமைப்போ புகார் சொல்லவில்லை. ஏன் கவுன்சிலர்களே கூட புகார் தரவில்லை. உட்கட்சி பிரச்னை தான் இந்த மனுவிற்கு காரணம். சில தி.மு.க., நிர்வாகிகள் துாண்டி விடுகின்றனர். கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த திட்டமிட்டு செயலாற்றுகின்றனர். இந்த விவகாரத்தை கட்சியின் தலைமைக்கு கொண்டு செல்வேன்.'', என்றார்.