/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
300 ஏக்கரில் தண்ணீரின்றி வாடும் நெற்பயிர்கள் கம்பம் விவசாயிகள் புலம்பல்
/
300 ஏக்கரில் தண்ணீரின்றி வாடும் நெற்பயிர்கள் கம்பம் விவசாயிகள் புலம்பல்
300 ஏக்கரில் தண்ணீரின்றி வாடும் நெற்பயிர்கள் கம்பம் விவசாயிகள் புலம்பல்
300 ஏக்கரில் தண்ணீரின்றி வாடும் நெற்பயிர்கள் கம்பம் விவசாயிகள் புலம்பல்
ADDED : டிச 27, 2025 05:46 AM
கம்பம்: கம்பம் சின்ன வாய்க்கால் புரவில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி வாடி வருவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு பாசனத்தில் 17 வாய்க்கால்கள் நீரை பகிர்ந்தளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கூடலூரில் ஆரம்பித்து பழநிசெட்டிபட்டி வரை வாய்க்கால்கள் உள்ளன. அதில் ஒன்று கம்பம் சின்ன வாய்க்கால். குள்ளப்பகவுண்டன் பட்டியில் துவங்கி கம்பம் கே.கே. பட்டி ரோட்டில் 8 கி.மீ. நீளம் கொண்டது.
கடந்த அக்.18 ல் பெய்த கனமழையால் குள்ளப்பகவுண்டன்பட்டி முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை உடைந்தது. இங்குள்ள மைக்ரோ மின் நிலையத்தின் தடுப்பணையாகும். மின் நிலையம் மழை வெள்ள நீரில் மூழ்கியது.
இதனை சரி செய்ய பணிகள் நடந்து வருகிறது. இங்குள்ள மின் நிலைய ஷட்டரை இரவில் மேலே தூக்கி விடுவதால், சின்ன வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லாமல் ஆற்றுக்குள் சென்று விடுகிறது. மறுநாள் காலை 10:00 மணிக்கு ஷட்டரை இறக்குவதால், அதன் பின் தண்ணீர் தேங்கி சின்ன வாய்க்காலுக்கு செல்கிறது.ஆனால் தண்ணீர் கடைசி வரை கிடைக்கும் முன் மாலை மீண்டும் ஷட்டரை தூக்கி விடுகின்றனர்.
இதனால் சின்ன வாய்க்கால் பரவில் உள்ள 1800 ஏக்கர் தண்ணீரின்றி சிக்கலில் உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக வீரப்ப நாயக்கன் குளம், ஒட்டு ஒடப்படி குளங்களில் தண்ணீர் தேக்காததாலும், சின்ன வாய்க்காலில் தண்ணீர் வராததாலும் கே.கே. பட்டி ரோடு மற்றும் வீரப்ப நாயக்கன்குளத்தின் கீழ் பகுதியில் உள்ள 300 ஏக்கர் வயல்கள் பயிர் தண்ணீரின்றி காய்ந்து வருவதாக குமுறுகின்றனர்.
இது குறித்து கம்பம் விவசாயிகள் சங்க செயலாளர் சுகுமாறன், நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது: அணையில் தண்ணீர் இருந்தும், பயிர்கள் வாடி வருகிறது. மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால், விவசாயிகள் துயரில் உள்ளோம். நீர்வளத் துறை அதிகாரிகளும் கண்டு கொள்ள மறுக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் போராடுவதை தவிர வழியில்லை என்றனர்.

