காட்டுத் தீயை கட்டுப்படுத்த 34 விரைவு தீயணைப்பு வாகனங்கள்
காட்டுத் தீயை கட்டுப்படுத்த 34 விரைவு தீயணைப்பு வாகனங்கள்
ADDED : ஜூன் 10, 2026 05:55 AM

போடி: தமிழக வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயை விரைந்து கட்டுப்படுத்தவும், வன விலங்குகளை மீட்கவும் நவீன வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 34 தீயணைப்பு வாகனங்கள் வனத்துறைக்கு வழங்கப்பட்டன.
காட்டுத்தீ ஏற்படும் பகுதிக்கு சென்று தீயை அணைப்பதற்கான உபகரணங்களின்றி வனத்துறையினர் சிரமப்பட்டனர்.
இச்சிரமங்களை தவிர்க்கும் நோக்கில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூ.6.92 கோடி ஒதுக்கப்பட்டு நவீன தகவல் தொடர்பு கருவி, 1500 லிட்டர் அளவு கொண்ட தண்ணீர் தொட்டி, ஜெனரேட்டர், தண்ணீர் பீய்ச்சி அடிக்க உயரழுத்த மோட்டார், ரசாயன உபகரணம், தீயை அணைக்கும் சிலிண்டர்கள், மைக், வன விலங்குகளை மீட்பதற்கான கூண்டு ஆகிய வசதிகளுடன் நவீன வாகனங்கள் வடிவமைக்கப்பட்டன.
மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தகவல் கிடைத்தவுடன் விரைந்து செல்லும் வகையில் இந்த வானங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் வன விலங்குகளை மீட்கவும், தளவாட பொருட்களை சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லவும் இந்த வாகனம் பயன்படும்.
முதற்கட்டமாக அடிக்கடி காட்டுத் தீ ஏற்படும் போடி, மேகமலை, கோவை உள்ளிட்ட வன கோட்ட பகுதிகளுக்கு 34 விரைவு தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
