ADDED : ஜூன் 25, 2026 10:45 PM
தேனி: தமிழகம் முழுவதும் கால் நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஜூலை 1 ல் துவங்குகிறது. இம் முகாம்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மாநிலத்தில் 2.50 கோடி கால்நடைகள் உள்ளன. இதில் பசு, காளை, எருமை 1.6 கோடி.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 50 முதல் 80 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு குழுவில் கால்நடை மருத்துவர், உதவியாளர் உட்பட 3 பேர் உள்ளனர். அவர்கள் கிராமங்கள் தோறும் சென்றும் தடுப்பூசி செலுத்துவர். 3 மாத கன்றுகள், சினை மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது.
கோமாரி தடுப்பூசி செலுத்தாத மாடுகளுக்கு பால் உற்பத்தி குறையும், சினை பிடிப்பது தாமதமாகும். இளம் கன்றுகள் இறப்பு அதிகரிக்கும்.
இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இத்தடுப்பூசியை ஜூலை 1 முதல் 31 க்குள் செலுத்த வேண்டும். செலுத்த தவறியவர்களுக்கு ஆக. 1 முதல் 10 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படும்.
மாநிலத்தில் 2280 குழுக்களில் 6840 பணியாளர்கள் இணைந்து இத்தடுப்பூசியை செலுத்த உள்ளனர். 230 கால்நடை மருத்துவமனைகள், 60 நடமாடும் மருத்துவமனைகளில் இப் பணிகள் நடக்கிறது என்றனர்.
