பண்ணைக் குட்டைகள் அமைக்க மானியம் வழங்கும் திட்டம் தேவை
பண்ணைக் குட்டைகள் அமைக்க மானியம் வழங்கும் திட்டம் தேவை
UPDATED : மே 08, 2026 04:02 PM
ADDED : மே 08, 2026 04:00 PM
கம்பம்:மானாவாரி நிலங்கள், தோட்டங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இறவை பாசன விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதிக வெப்பம் , அதிக மழை என சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பண்ணை குட்டைகள் அமைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பண்ணை குட்டைகள் மானாவாரி நிலங்கள் மற்றும் இறவை பாசன தோட்டங்களிலும் அமைக்க கடந்த சில ஆண்டுகளாக அனுமதி வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 8 உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு தலா 3 வீதம் 24 பண்ணை குட்டைகள் அமைக்க அனுமதி வழங்கினார்கள். ஆனால் இந்தாண்டிற்கு இன்னமும் அறிவிப்பு வெளியாகவில்லை.
இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், '20 அடி நீளம், 20 அடி அகலம் 3 அடி ஆழத்தில் பண்ணை குட்டை அமைக்க வேண்டும். புளு கலர் பாலிதின் சீட் தரையில் விரித்திருக்க வேண்டும். மழை நீரையோ அல்லது ஆழ்துளை கிணற்று நீரையோ நிரப்ப வேண்டும். இந்த பண்ணை குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப் பட்டது. இந்தாண்டு இன்னமும் அரசிடம் இருந்து இது பற்றியதகவல் வரவில்லை,' என்றனர். பண்ணைக் குட்டைகள் அமைக்கும் மானிய திட்டத்தை இந்த ஆண்டு அமல்படுத்த தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் முன்வர வேண்டும் என்று இறவை பாசன விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
