ADDED : பிப் 08, 2025 05:47 AM

மூணாறு: கேரள, தமிழக எல்லையோரம் உள்ள சின்னார் வன உயிரின சரணாலயத்தில் காட்டு தீ கட்டுப்பாட்டு கோடு அமைக்கும் பணிக்குச் சென்ற மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த விமலன் 57, காட்டு யானை தாக்கி இறந்தார்.
வனவிலங்கு சரணாலயத்தினுள் மலைவாழ் மக்கள் வசிக்கும் சம்பக்காடு காலனியைச் சேர்ந்த விமலன் உள்பட ஒன்பது பேர் கொண்ட குழு நேற்று காலை சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்டு தீ கட்டுப்பாட்டு கோடு அமைக்கும் பணிக்கு சென்றனர். அப்போது காலை 9:00 மணிக்கு வள்ளித்தோடு பகுதியில் சென்றபோது எதிர்பாராத வகையில் விரிந்த கொம்பன் எனும் ஆண் காட்டு யானையிடம் முன்னால் சென்று கொண்டிருந்த விமலன் சிக்கினார்.
அவரை காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசி தாக்கியது. அதனை பார்த்த உடன் சென்றவர்கள் பலமாக கூச்சலிட்டதால் யானை பின் வாங்கியது. அதன்பிறகு பலத்த காயம் அடைந்த விமலனை மீட்டு மறையூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்தார்.