UPDATED : மே 15, 2026 03:33 PM
ADDED : மே 15, 2026 03:30 PM
ஆண்டிபட்டி:குன்னூர் பகுதியில் இருந்து உறை கிணறுகள் மூலம் கிடைக்கும் நீரை கொதிக்க வைத்து பயன்படுத்த சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களுக்கு குன்னூர் ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக குன்னூர் ஆற்றில் போதுமான அளவு நீர் வரத்து இல்லை. தற்போது பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரில் மிகக் குறைந்த அளவே குன்னூர் வழியாக வைகை அணையில் சேருகிறது. தற்போது வீரபாண்டி திருவிழாவில் ஆற்றில் வரும் நீரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.
வீரபாண்டியை கடந்து குன்னூர் வழியாக வரும் குறைவான நீர் அதிகப்படியான கசடுகளை கொண்டுள்ளது. உறை கிணறுகளில் சுரக்கும் நீர் சுத்திகரிக்கப்படுவதில்லை. தற்போதுள்ள சூழலில் குடிநீரால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் குன்னூர் ஆற்றில் இருந்து கிடைக்கும் நீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
