/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பருவமழையில் தென்னையை பாதுகாக்க ஆலோசனை
/
பருவமழையில் தென்னையை பாதுகாக்க ஆலோசனை
ADDED : அக் 26, 2025 04:58 AM
தேனி: மாவட்டத்தில் தென்னை 25,800 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தென்னையை எவ்வாறு பாதுகாக்கலாம் என தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: புயல் எச்சரிக்கை விடுக்கப்படும் காலங்களில் புயலுக்கு முன் தேங்காய், இளநீர் அறுவடை செய்ய வேண்டும். மரத்தின் கீழ் பகுதியில் உள்ள கனமான, பழைய ஓலைகளை வெட்டி அகற்றிட வேண்டும்.
மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து, நீர் தேங்காதவாறு, வடிகால் ஏற்படுத்த வேண்டும். தண்டு பகுதியில் பூஞ்சை, பாசி வளர்வதை தடுக்க சுண்ணாம்பு அடித்தல் அவசியம். மரத்தில் தேவையின்றி உள்ள பன்னாடை, காய்ந்த மட்டை, குறும்பை ஆகியவற்றை அப்புறப் படுத்த வேண்டும். மானாவரி தோப்புகளில் ஆங்காங்கு சிறு குழிகள் வெட்டி நீரை சேமிக்கலாம்.
அதிக காற்று வீசும் காலத்தில் மரம் ஏறுவதை தவிர்க்க வேண்டும். நீர், ரசாயன உரமிடுவதை தவிர்த்து, இயற்கை உரமிட வேண்டும். மரங் களுக்கு காப்பீடு செய்வது முக்கியம் என தெரிவித்தனர்.

