/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திறப்பு விழாவோடு பூட்டிய வேளாண் விரிவாக்க மையம்
/
திறப்பு விழாவோடு பூட்டிய வேளாண் விரிவாக்க மையம்
ADDED : ஆக 06, 2025 09:08 AM
கம்பம் : காமயகவுண்டன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தை பெயரளவில் திறப்பு விழா நடத்தி பூட்டி சென்றனர்.
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் வேளாண் இடுபொருள்கள், விதைகள், பண்ணைக் கருவிகள், நுண்ணுயிர் உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் போன்றவை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும். ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு விரிவாக்க மையம் கிராமத்தில் அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் வழங்குவது, மானியத்தில் இடு பொருள்கள், நுண்ணூட்ட உரங்கள் வழங்கப்படும்.
இம் மையங்களில், கிராம விவசாயிகள், உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வராமல், விரிவாக்க மையத்திலேயே பெற்றுக் கொள்ளவும், தொழில்நுட்பங்கள் தெரிந்து கொள்ளவும் விரிவாக்க மையங்கள் பயன்படுகிறது. கம்பம் வேளாண் உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் காமயகவுண்டன்பட்டியில் உள்ள விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டடம் கட்டி திறந்து வைத்தனர். ஆனால் புதிய கட்டடத்தை திறந்து விட்டு பயன்படுத்தாமல் பூட்டியே வைத்துள்ளனர். பயன்படாமல் அந்த புதிய கட்டடம் வீணடிக்கப்பட்டு வருகிறது. விரிவாக்க மையத்திற்கு வரும் விவசாயிகள் அதிகாரிகள் இன்றி பூட்டியுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். வேளாண் இணை இயக்குநர் விரிவாக்க மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.