ADDED : பிப் 15, 2024 06:11 AM
மூணாறு: கொரோனா ஊரடங்கின்போது 2021ல் முதன்முதலாக பிரபல படையப்பா ஆண் காட்டு யானை இரவில் நகருக்குள் ' ஹாயாக' வலம் வந்தது. அடிக்கடி இரவில் நகருக்குள் வலம் வந்த படையப்பா கொரோனா காலம் முடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகு நகரில் ஜி.எச். ரோட்டில் உள்ள பாப்புஞ்சிக்குச் சொந்தமான காய்கறி கடையையும், தபால் அலுவலம் அருகே பால்ராஜ்க்குச் சொந்தமான காய்கறி கடையையும் பல முறை சேதப்படுத்தியது.
இறுதியாக பாப்புஞ்சியின் கடையை 2022 ஏப்.10 சேதப்படுத்தியது. 22 மாதங்களுக்கு பிறகு மூன்று நாட்களுக்கு முன் இரவு 8:30 மணிக்கு ஒற்றை கொம்பன் ஆண் காட்டு யானை நகரில் எதிர்பாராத வகையில் தனியார் தேயிலை கம்பெனியின் தலைமை அலுவலகம் அருகில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி அருகே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை பார்த்து சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வரும் வழியில் யானை தனியார் கம்பெனிக்குச் சொந்தமான பங்களா வளாகத்தில் நிறுத்தி இருந்த காரை சேதப்படுத்தியது. வங்கி அருகே நின்ற யானையை முக்கிய ரோடு பகுதிக்கு வரவிடாமல் தடுத்து யானை தடுப்பு பிரிவினர் பட்டாசு வெடித்து விரட்டினர்.

