அண்ணா கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் ரோடு மறியல்
அண்ணா கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் ரோடு மறியல்
ADDED : பிப் 03, 2026 06:19 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி க.விலக்கில் ரோடு மறியல் போராட்டம் செய்தனர்.
இந்த நூற்பாலையில் 263 தற்காலிக தொழிலாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக பணி செய்கின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராடுகின்றனர். பணி நிரந்தரம் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அதனை நிறைவேற்றாமல் நூற்பாலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு எதிராக கோர்ட்டில் தடை ஆணை பெற்றுள்ளது. தொழிற்சாலை ஆய்வாளரும் தொழிலாளர்களின் பணி நிரந்தரத்திற்கு பரிந்துரைத்துள்ளார். நூற்பாலை நிர்வாகத்தின் போக்கை கண்டித்தும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் நேற்று க.விலக்கில் தொழிலாளர்கள் ரோடு மறியல் செய்தனர். ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சிவசுப்பு தலைமையிலான போலீசார் மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்தினர். மீண்டும் அங்கிருந்து தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று கூட்டுறவு நூற்பாலை முன்பு மறியலை தொடர்ந்தனார். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 49 பெண்கள் உட்பட 82 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
