/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாழை அறுவடை பின்சார் தொழில்நுட்ப பயிற்சி முகாம்
/
வாழை அறுவடை பின்சார் தொழில்நுட்ப பயிற்சி முகாம்
ADDED : ஜன 27, 2025 04:42 AM
சின்னமனுார் : காமாட்சிபுரம் வேளாண் அறிவியல் மையத்தில் வாழையில் அறுவடை பின் சார் தொழில்நுட்பம், மதிப்புக் கூட்டல் பயிற்சி நடந்தது.
இப்பயிற்சி முகாமில் திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ்வரன் அறுவடை பின் தொழில்நுட்பம் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். இந்த மையத்தின் மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ரம்யாசிவச்செல்வி வாழை அறுவடை பின்சார் தொழில்நுட்பம், வாழை மதிப்பு கூட்டலுக்கு பயன்படும் இயந்திரங்கள், பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், சேமிக்கும் முறைகள், உடனடி கலவை பொருட்கள், அவற்றில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள், வாழை பட்டை நார்களில் இருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் பற்றி விளக்கினார்.
மேலும் குறைந்த செலவில் பழங்களை பழுக்க வைக்கும் தொழில்நுட்பம், வாழை ஊட்டச்சத்து கலவை, பானம், வாழைப் பூ ஊறுகாய், வாழை மாவு பிஸ்கட், ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் எப்படி தயாரிப்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு, தரம், தொழில் துவங்க தேவைப்படும் சான்றிதழ்கள் பெறுவதற்கான வழிமுறைகள், தொழில் துவங்க அரசு திட்டங்கள், சந்தை படுத்தும் முறைகள் பற்றியும் விளக்கப்பட்டன. இப்பயிற்சியில் வேளாண் மையத்தின் தொழில்முனைவோர்கள் ஹேமா, குமார பாண்டியன் ஆகியோர் ஊறுகாய் தயாரிப்பு பற்றி செயல் விளக்கம் அளித்தனர். வேளாண் மைய அலுவலர் அனுப்ரியங்கா நன்றி கூறினார்.
இந்த பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பொது மக்களும் பங்கேற்று பயனடைந்தனர்.

