அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் இடமலைக்குடி மலைவாழ் மக்கள்
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் இடமலைக்குடி மலைவாழ் மக்கள்
UPDATED : நவ 13, 2026 04:09 AM
ADDED : நவ 12, 2026 06:20 PM

மூணாறு: மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர்.
கேரளாவில் மலைவாழ் மக்களுக்கு என 2010ல் தனி ஊராட்சியாக உருவாக்கப்பட்ட இடமலைகுடி ஊராட்சி மூணாறு அருகில் அடர்ந்த வனத்தினுள் உள்ளது. 13 வார்டுகளை கொண்ட ஊராட்சியில் 24 குடிகளில் ( கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அங்கு 2011ல் நடத்தப்பட்ட கணக்குபடி மக்கள் தொகை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்ளதாக தெரியவந்தது.
கேரள மாநிலம் உருவாகி 70ம் ஆண்டுகளை கடந்துள்ளது. ஆனால் இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்களின் அவலநிலை பெரும் தலைகுனிவை ஏற்படுத்துவதாக உள்ளது. அங்கு ரோடு, மருத்துவம், குடிநீர், வீடு, பள்ளி உள்பட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் இன்று வரை தவித்து வருகின்றனர். அடிப்படை வசதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் முறையாக சென்றடையாததால், வசதிகளுக்காக மக்கள் ஏங்கி வருகின்றனர்.
குறிப்பாக நோயாளிகளின் உயிரை காக்க பல கி.மீ., தூரத்திற்கு டோலி கட்டி தூக்கி செல்லும் அவல நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
ஊராட்சியில் கூடலார்குடியை சேர்ந்த அசோகனுக்கு 50, திடிரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரை நேற்று முன்தினம் ஆறு, கரடு, முரடான பாதை ஆகியவற்றின் வழியாக 5 கி.மீ., தூரம் டோலி கட்டி தூக்கி கொண்டு மாங்குளம் ஆனக்குளம் பகுதிக்கு சென்றனர். அங்கிருந்து வாகனம் மூலம் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். இது போன்ற துயரங்கள் எப்போது முடிவுக்கு வரும் என்ற ஏக்கத்தில் மலைவாழ் மக்கள் உள்ளனர்.
