/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
2 ஆண்டுகளுக்கு பின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு; போலீசார் மனுவை ஏற்று கலெக்டர் அனுமதி
/
2 ஆண்டுகளுக்கு பின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு; போலீசார் மனுவை ஏற்று கலெக்டர் அனுமதி
2 ஆண்டுகளுக்கு பின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு; போலீசார் மனுவை ஏற்று கலெக்டர் அனுமதி
2 ஆண்டுகளுக்கு பின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு; போலீசார் மனுவை ஏற்று கலெக்டர் அனுமதி
ADDED : அக் 14, 2025 06:41 AM

கம்பம்: கோவை அன்னுார் போலீஸ் எல்லையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தேனி மாவட்டம், கம்பம் அருகே சாமாண்டிபுரம் முருகன் 38, சடலத்தை நேற்று தோண்டி உடற்கூராய்வு செய்தனர்.
கம்பம் சாமாண்டிபுரம் ராமு மகன் முருகன் 38, இவர் 20 ஆண்டுகளுக்கு முன் கோவை அன்னூர் அருகே உள்ள குமாரபாளையத்தில் குடியேறினார். அங்கு கவிதா 37, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
2023 ஜூலையில் முருகன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக முருகன் குடும்பத்தினருக்கு கவிதா தகவல் கூறினார். அவர்கள் சென்று முருகன் பிரேதத்தை கொண்டு வந்து சாமாண்டிபுரத்தில் அடக்கம் செய்தனர்.
தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக முருகனின் தந்தை ராமு கோவை அன்னூர் போலீசில் 2023 செப்டம்பரில் புகார் செய்தார். அன்னுார் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து முருகனின் பிரேதத்தை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய முடிவு செய்தனர். இதற்காக 2023 செப். 4ல் அப்போதைய உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரனிடம் மனு கொடுத்தனர்.
2 மாதங்களுக்குப்பின் புகார் தரப்பட்டுள்ளது, உடலை தோண்டி எடுக்க நீதிமன்ற உத்தரவு பெற்று வர வேண்டும் என தாசில்தார் தெரிவித்தார். ஆனால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் தோண்டி எடுக்க அனுமதி உண்டு என போலீஸ் தரப்பில் கூறினர்.
நீண்ட இழுபறிக்குப்பின் உடலை தோண்டி உடற்கூராய்வு செய்ய அனுமதிக்குமாறு தேனி கலெக்டர், எஸ்.பி., க்கு தற்போதைய அன்னூர் இன்ஸ்பெக்டர் செல்வம் கடிதம் கொடுத்தார். கடிதத்தை ஏற்று புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து உடற் கூராய்வு செய்ய கலெக்டர் அனுமதி வழங்கினார்.
இதனை தொடர்ந்து நேற்று காலை உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன் முன்னிலையில் தேனி மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கணபதி, ஜெகதீஷ் கொண்ட மருத்துவ குழுவினர் சாமாண்டிபுரம் சுடுகாட்டில் 2 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட முருகனின் உடலை தோண்டி எடுத்தனர்.
எலும்பு கூடு மட்டும் இருந்தது. அவரது தலை முடி மற்றும் மண் துகள்களையும் எலும்புகளையும் எடுத்து சென்றனர். இன்ஸ்பெக்டர் செல்வம், அதிகாரிகள் உடனிருந்தனர். புதைக்கப்பட்ட முருகனின் மனைவி கவிதா, ராமு தரப்பில் அவரது மகள் செல்வராணி, கணவர் அறிவழகன் வந்திருந்தனர். ராமு தற்போது உயிரோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.