ADDED : ஏப் 13, 2026 02:27 AM

தேனி: தேனி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் பல்வேறு விபரங்கள் அடங்கிய 'பூத் சிலிப்' வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.
தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு பூத்சிலிப் வழங்கப்படும். அதில் வாக்காளர் பெயர், அடையாள அட்டை எண், ஓட்டுச்சாவடி விவரம் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். தேனி நகர்பகுதியில் வாக்காளர்களுக்கு நேற்று பூத்சிலிப் வழங்கும் பணி துவங்கியது. பூத்சிலிப்புடன் வாக்காளர்களுக்கான தகவல் கையேடு வழங்கப்பட்டது. இந்த கையேட்டில் சிவிஜில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் செயலி உள்ளிட்டவை பற்றி எடுத்துரைக்கப்பட்டிருந்தது.
தேனியில் சிவாராம் நகர், சமதர்மபுரம், அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வீடு வீடாக சென்று பூத் சிலிப் வினியோகிக்கும் பணியில் பி.எல்.ஓ.,க்கள் ஈடுபட்டனர். தினமும் மாலை 5:00 மணிக்கு விநியோகம் பற்றி மேற்பார்வையாளர்களுக்கு அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
பூத்சிலிப் வழங்கும் பணி ஏப்.,18க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் பி.எல்.ஓ.,க்களை தொடர்பு கொள்ளலாம்.
