ADDED : மார் 11, 2026 06:10 AM
கம்பம்: தேனி மாவட்டம் சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றில் குடும்பத்தினருடன் குளித்த 13 வயது சிறுவன் சகதியில் சிக்கி உயிரிழந்தார்.
போடி அருகே நாகலாபுரத்தை சேர்ந்தவர் காமாட்சி. தனது குடும்பத்தினருடன் நேற்று காலை சுருளி அருவிக்கு திதி கொடுப்பதற்காக சென்றார்.
அருவியில் நீர்வரத்து இல்லாததால் சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றில் குறைந்தளவு வந்த நீரில் குளித்தனர். இவர்கள் குளித்த இடத்தில் நாராயணத் தேவன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் உறை கிணறுகள் உள்ளன.
சுற்றி அதிகளவு சகதி இருக்கும். இந்நிலையில் காமாட்சியின் மகன் தவசி 13, நீந்திக்கொண்டே உறை கிணறு அருகே சென்று சகதியில் சிக்கினார். அருகில் இருந்தவர்கள் கம்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். காலை 11:00 மணி முதல் மீட்பு பணியில் ஈடுபட்டும் மீட்க முடியவில்லை.
ஆத்திரமடைந்த உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். ராயப்பன்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் சிறுவனின் உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
