UPDATED : அக் 18, 2026 04:51 PM
ADDED : அக் 18, 2026 04:47 PM
கூடலுார்: குமுளியில் ஆவணங்களின்றி காரில் எடுத்து சென்ற ரூ.8.40 லட்சத்தை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக கேரள எல்லையான குமுளியில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக கேரள மாநில குமுளி எஸ்.ஐ., ஸ்ரீநாத் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தமிழகப் பகுதியில் இருந்து கேரளா நோக்கி சென்ற காரில் சோதனை செய்தனர். காரில் ரொக்கமாக ரூ.8.40 லட்சம் பணம் இருந்தது. இத்தொகை பற்றி காரில் வந்த ஆந்திரமாநிலம் ஓங்கல் பகுதியை சேர்ந்த நரேந்திர பாபு உள்ளிட்டோரிடம் விசாரித்தனர். குமுளியில் ஏலக்காய் வாங்க பணம் எடுத்து வந்ததாகவும், தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியனர். முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறுகையில், தற்போது போதை பொருள் கடத்தலுக்காக பணப்பரிமாற்றம் அதிகளவில் நடக்கிறது. இதனால் பறிமுதல் செய்த தொகைக்கு முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளோம் என்றனர்.
