ADDED : ஆக 17, 2026 04:41 PM
ஆண்டிபட்டி, ஆக.18 -
ஆண்டிபட்டி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை குறைந்துள்ளது.
ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, மூணாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, ஏத்தக்கோவில் போடிதாசன்பட்டி, கொத்தப்பட்டி, கதிர்நரசிங்கபுரம், கண்டமனூர், கணேசபுரம், கடமலைக்குண்டு உட்பட பல கிராமங்களில் முருங்கை சாகுபடி உள்ளது. அதிகப்படியான காற்று, மழை முருங்கை விளைச்சலில் பாதிப்பு ஏற்படுத்தும். தற்போதுள்ள சீதோஷ்ணம் முருங்கையில் காய்ப்புக்கு ஏற்றதாக இருப்பதால் விளைச்சல் அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது: கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு விளைச்சல் குறைவால் முருங்கைக்காய் கிலோ ரூ.150 வரை விலை போனது. விளைச்சல் தொடர்ந்து அதிகரித்ததால் தற்போது தரத்திற்கு தக்கபடி கிலோ ரூ. 25 முதல் 30 வரை விலை உள்ளது. இப் பகுதியில் விளையும் முருங்கைக்காய் ஆண்டிபட்டி மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தினமும் இரண்டு டன் அளவிலான முருங்கைக்காய் இப்பகுதியில் விளைகிறது. முகூர்த்த சீசன் துவங்கியதும் தேவை அதிகரிப்பால் விலை உயரும் வாய்ப்புள்ளது என்றனர்.
