/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம்
/
ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம்
ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம்
ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 08, 2025 03:15 AM

கூடலுார்: வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு பிடித்தம் செய்த தொகையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், கூடலுார் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலுார் நகராட்சி 21 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் 35க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தினக்கூலியாக ஒப்பந்ததாரர் மூலம் ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களிடம் ஒப்பந்த நிறுவனம் வருங்கால வைப்பு நிதிக்காக மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, இதனுடன் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகையும் சேர்த்து பல ஆண்டுகளாக பணியாளர்களுக்கு வழங்கவில்லை.
இதனைப் பெற்றுத் தர அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.
ஜூலை 17ல் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அரசு முகாமில் பணியாளர்கள் சார்பில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமதுவை முற்றுகையிட்டு, மனு வழங்கினர். உடனடியாக பரிசீலனை செய்து பணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாகியும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.
நேற்று காலை கூடலுார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
தீர்வு கிடைக்கும் வரை இப்பகுதியிலேயே சமையல் செய்து தங்குவதற்காக அரிசி பருப்பு காய்கறி பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் நகராட்சி கமிஷனர் கோபிநாத், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், ஆக.11க்குள் அனைவருக்கும் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

