/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்புச் சுவர்களால் விபத்து அபாயம்; சபரிமலை சீசன் துவங்கும் முன் சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : அக் 15, 2025 12:15 AM

கூடலுார் : குமுளி மலைப்பாதையில் உள்ள வளைவுகளில் சேதமடைந்த தடுப்புச் சுவர்களால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சபரிமலை சீசன் துவங்கும் முன் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
தேனி, கேரளா, இடுக்கி மாவட்டத்தை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் குமுளி மலைப்பாதையும் ஒன்றாகும். அருகில் சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் அதிகம் இவ் வழியாக வரும். சபரிமலை உற்சவ காலகட்டங்களில் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் தினந்தோறும் வந்த வண்ணம் இருக்கும். லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள இப்பாதையில் மாதா கோயில் வளைவு, கொண்டை ஊசி வளைவு, இரைச்சல் பாலம் வளைவு, பழைய போலீஸ் சோதனை சாவடி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து நடக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் மண்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து கற்களால் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டது. ஆனால் முழுமையாக இது நடைபெறவில்லை. பல இடங்களில் தடுப்புச் சுவர் சேதமடைந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
கொண்டை ஊசி வளைவில் மேடு அதிகமாக இருப்பதால்.கனரக வாகனங்கள் திணறிக் கொண்டு ஏறும். தடுப்புச் சுவரில் வாகனங்கள் மோதி சேதமடைந்துள்ளது. மேலும் அப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்லும்போது மண் சரிவு ஏற்பட்டு 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
சபரிமலை உற்சவ விழா துவங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. அப்போது ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் அதிகமாக வரும். அதற்கு முன் சேதமடைந்த தடுப்புச் சுவர்களை சீரமைத்து, தடுப்புக் கம்பிகள் அமைத்து முன்எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.