UPDATED : ஜூன் 15, 2026 05:33 PM
ADDED : ஜூன் 15, 2026 05:32 PM

போடி:போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாயில் நீர் மாசு ஏற்பட்டுள்ளதால் மீன்கள் இறந்த கரை ஓரங்களில் கிடக்கிறது. இதனால் வீசும் துர்நாற்றத்தால் சுகாதாரகேடு ஏற்படுகிறது.
மீனாட்சியம்மன் கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். கண்மாயில் தண்ணீர் தேங்குவதன் மூலம் சுந்தரராஜபுரம், விசுவாசபுரம், அம்மாபட்டி, பத்திரகாளிபுரம், மீனாட்சிபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 450 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பயன் பெறும். டாஸ்மாக் பார்களில் தேக்கமாகும் பிளாஸ்டிக் டம்ளர், பாலிதீன், குப்பை கழிவுகளை கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து வாய்க்காலில் கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகள் மீனாட்சியம்மன் கண்மாயில் சேர்கிறது.
நீர்வரத்து வாய்க்காலின் இருபுறமும் திறந்தவெளி சுகாதார வளாகமாக பயன்படுத்துவதோடு, கோழி கழிவுகளை கண்மாயில் கொட்டி வருகின்றனர். மழை இல்லாததால் நீர் வரத்து குறைந்து சாக்கடை கழிவுநீர் கண்மாயில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்படுவதோடு, தேங்கி உள்ள கழிவு நீரை பருகும் பறவைகள், மீன் குஞ்சுகளும் இறக்கும் நிலை ஏற்படுகிறது. தற்போது கண்மாயில் இறந்த நிலையில் மீன்கள் மிதந்து கரை ஓரங்களில் கிடக்கிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் மக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதாரகேடு ஏற்படுகிறது.
கண்மாய்க்கு வரும் பறவைகள், மீன்களை காக்கவும், சுகாதார கேடு ஏற்படாத வகையில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அகற்றுவதோடு, சாக்கடை கழிவுநீர் கலக்காத வகையில் பாதுகாத்திட நீர்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
