சத்திரம் காட்டு வழியில் சபரிமலை செல்ல துவங்கிய பக்தர்கள்
சத்திரம் காட்டு வழியில் சபரிமலை செல்ல துவங்கிய பக்தர்கள்
ADDED : நவ 17, 2026 07:21 PM

மூணாறு: இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சத்திரம், புல்மேடு பாரம்பரிய காட்டு வழியில் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல துவங்கினர்.
சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலை 12 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த பாரம்பரிய காட்டு வழியில் பக்தர்கள் நடந்து செல்வதுண்டு. பெரியாறு புலிகள் காப்பகம் வனத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வழியில் இன்று (நவ.,17) முதல் பக்தர்கள் செல்ல துவங்கினர்.
சத்திரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலில் டோக்கன் வழங்கப்பட்டு, பிளாஸ்டிக் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனைக்கு பின் காட்டு பாதையில் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
முதல் குழுவாக 19 வது முறை : கொல்லம் பரவூர், நெடுங்கோலம் பகுதியைச் சேர்ந்த சரத் தலைமையிலான பக்தர்கள் குழு, சத்திரம் காட்டு வழியில் 18 ஆண்டுகளாக முதல் முதலாக சென்றனர். அக்குழு இன்று முதல் டோக்கன் பெற்று 19ம் ஆண்டாக முதலில் சென்றனர்.
முன்பதிவு:
வண்டி பெரியாறு, வாலார்டி பகுதிகளில் முன்பதிவு மையங்கள் உள்ளன. வாலார்டியில் வாகனங்கள் நிறுத்த இட வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகரிக்கும் பட்சத்தில், அதற்கு ஏற்ப கூடுதல் வசதிகள் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேரம்:
சத்திரத்தில் இருந்து தினமும் காலை 7:00 முதல் மதியம் 2:00 மணி வரை காட்டு வழியில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறனர். காட்டு வழியில் செல்லும் பக்தர்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறும், வனப் பகுதியில் குப்பைகளை வீசாமலும், வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் அளிக்காமலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பயணத்தை உறுதிசெய்யுமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.
