காட்சி பொருளான மழை மானிகள்: துல்லியமாக கணக்கீடுவதில் சிக்கல்
காட்சி பொருளான மழை மானிகள்: துல்லியமாக கணக்கீடுவதில் சிக்கல்
UPDATED : செப் 24, 2026 04:46 PM
ADDED : செப் 24, 2026 04:30 PM
தேனி:மாவட்டத்தில் 2024ல் பொருத்தப்பட்ட தானியங்கி மழைமானிகள் காட்சி பொருளாக மாறி உள்ளதால், பதிவாகும் மழை அளவை துல்லியமாக கணக்கிடுவதில் சிரமம் தொடர்கிறது.
மாவட்டத்தில் பெய்யும் மழையை கணக்கிட ஆண்டிபட்டி, அரண்மனைப்புதுார், வீரபாண்டி, பெரியகுளம், மஞ்சளாறு, சோத்துப்பாறை, வைகை அணை, போடி, உத்தமபாளையம், கூடலுார், பெரியார் அணை, தேக்கடி ஆகிய 12 இடங்களில் மழை மானிகள் பொருத்தப்பட்டு மழை அளவு பதிவு செய்யப்பட்டு வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் சண்முகா நதி அணை பகுதியில் மழைமானி பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. 13 இடங்களில் மழைமானி இருந்தாலும் சில இடங்களில் நல்ல மழை பெய்தாலும் அதனை கணக்கிட முடியாமல் இருந்தது. இதற்கு தீர்வு காண 2024ல் கூடுதலாக தானியங்கி மழைமானிகள் பொருத்தப்பட்டன.
தாலுகா வாரியாக தேனியில் 2, பெரியகுளத்தில் 4, ஆண்டிப்பட்டியில் 6, போடியில் 5, உத்தமபாளையத்தில் 9 என 26 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்தில் ஒரு தானியங்கி வானிலை மானியும் அமைக்கப்பட்டது. இவற்றில் பதிவாகும் மழை அளவு 2024 வடகிழக்கு பருவமழையின் போது வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறி இருந்தனர்.
ஆனால் கருவிகள் பொருத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல ஆகியும் அவற்றில் பதிவாகும் மழை அளவு இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது. அந்த கருவிகள் பயன்பாட்டில் உள்ளனவா என சந்தேகங்களையும் எழுப்புகின்றன. பல லட்ச ரூபாய் மதிப்பில் பொருத்தப்பட்ட மழை மானிகள் பயன்பாடின்றி காட்சி பொருளாக மாறி உள்ளன. இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, பதிவாகும் மழை அளவை வெளியிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
