/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜல்ஜீவன் திட்ட பங்களிப்பு தொகை வசூலிக்க முடியாமல் திணறல்
/
ஜல்ஜீவன் திட்ட பங்களிப்பு தொகை வசூலிக்க முடியாமல் திணறல்
ஜல்ஜீவன் திட்ட பங்களிப்பு தொகை வசூலிக்க முடியாமல் திணறல்
ஜல்ஜீவன் திட்ட பங்களிப்பு தொகை வசூலிக்க முடியாமல் திணறல்
ADDED : மே 27, 2025 01:26 AM

கம்பம்: 'ஜல்ஜீவன்' திட்ட பயனாளிகளிடம் பங்களிப்பு தொகை வசூலிக்க முடியாமல் உள்ளாட்சி பணியாளர்கள் திணறுகின்றனர்.
ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்க ஊராட்சிகளில் ஜல்ஜீவன் என்றும், பேரூராட்சி, நகராட்சிகளில் 'அம்ரூத்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் மக்கள் தொகை அடிப்படையில் ரூ.30 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்தது. திட்டத்தில் ஊராட்சிகளில் 500 முதல் 2 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சிகளிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்தில் ஊராட்சிகளில் புதிய இணைப்பு வழங்க டெபாசிட் ரூ.3 ஆயிரம் என்றும், ஊராட்சிக்கு அரசு வழங்கிய திட்ட நிதியில், மக்களின் பங்கு தொகையை டெபாசிட்டுடன் 10 சதவீதம் சேர்ந்து வசூலிக்க உத்தரவிடப்பட்டது. மக்களின் பங்கு தொகை ரூ.ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை ஒவ்வொரு ஊராட்சிக்கும் மாறுபடுகிறது.
ஜல்ஜீவன் இணைப்புகளுக்கு தேனி மாவட்டத்தை தவிர்த்து பிற மாவட்டங்களில் ரூ.30 வசூலிக்கின்றனர். ஆனால் தேனி ஊராட்சிகளில் ஏற்கனவே குடிநீர் கட்டணம் ரூ.60 வசூலித்து வருவதால் அதையே தொடர்கின்றனர்.
டெபாசிட்டுடன் சேர்ந்து வசூலிக்கப்படும் பங்கு தொகை அந்த ஊராட்சிக்கு வழங்கப்பட்ட தொகையை பொறுத்து மாறுபடுகிறது. ஒரு ஊரில் பங்களிப்பு தொகை ரூ. ஆயிரம் என்றும், மற்றொரு ஊராட்சியில் ரூ.2 ஆயிரம் என்றும் மாறியுள்ளது.
இது குறித்து ஊராட்சி செயலர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீடு தொகை வேறுபாடு உள்ளதால் பங்களிப்பு தொகை வேறுபடுகிறது. டெபாசிட் ஒரே மாதிரியாக ரூ.3 ஆயிரம் என நிர்ணயித்துள்ளோம். குடிநீர் கட்டணம் ஏற்கனவே ரூ.60 வசூலிப்பதால் அதில் மாற்றம் செய்யவில்லை. ஆனால் ஜல்ஜீவன் திட்டத்தில் இணைப்பு இலவசம், கட்டணம் இல்லை என வதந்தியை பரப்பியதால், ஊராட்சியிலும் குடிநீர் கட்டணம், பங்களிப்பு தொகை, டெபாசிட் வசூலிக்க முடியவில்லை. இதனால் ஊராட்சியிலும் லட்சக் கணக்கில் நிலுவை உள்ளது . இதே நிலை தான் பேரூராட்சி, நகராட்சிகளிலும் உள்ளது. இலவசம் என்று கூறி விட்டு பங்களிப்பு தொகை, டெபாசிட் என கேட்பதா என மக்கள் கட்டணம் செலுத்த மறுக்கின்றனர். இதனால் ன்ன செய்வது எனத் தெரியாமல் புலம்புகின்றோம் என்றனர்.