கூடலுார் நகராட்சியில் குப்பை அகற்ற முடியாமல் திணறல்
கூடலுார் நகராட்சியில் குப்பை அகற்ற முடியாமல் திணறல்
ADDED : மார் 01, 2026 06:45 AM
கூடலுார்: கூடலுாரில் குப்பை கொட்டுவதற்கு இடமின்றி சாலைகளில் ஆங்காங்கே தேங்கியுள்ளது. அதனை அகற்ற முடியாமல் நகராட்சி திணறி வருகிறது.
கூடலுார் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பை குடியிருப்புப் பகுதியை ஒட்டியுள்ள பெத்துக் குளத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்தது. குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் புகையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. பிப்.23ல் மக்கள் ஒருங்கிணைந்து குப்பை கிடங்கு செல்லும் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தினர். குப்பையை பெத்துகுளத்தில் கொட்டாமல் தடுத்து மக்கள் கருப்பு கொடியுடன் ஊர்வலம் சென்றனர்.
இதன் எதிரொலியாக உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., செய்யது முகமது, தாசில்தார் கண்ணன் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் பெத்துக்குளத்தில் குப்பை கொட்டப்படமாட்டாது, மாற்று இடத்தில் கொட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
அதன்பின் நகராட்சியில் சேகரமாகும் குப்பை மயானப் பகுதியில் கொட்டப்பட்டது. தினமும் நகரில் 13 முதல் 14 டன் வரை குப்பை சேகரமாகிறது. இவை அனைத்தும் அப்பகுதியில் கொட்டுவது சாத்தியமற்றது. உடனடியாக மாற்று இடம் ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் மாநில நெடுஞ்சாலை, முக்கிய வீதிகளில் குப்பை அகற்றாமல் ஆங்காங்கே தேங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு உடனடியாக மாற்று இடம் தேர்வு செய்வதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
