கல்லுாரிகளில் யு.எம்.ஐ.எஸ்., பதிவு செய்வதில் சிக்கல்
கல்லுாரிகளில் யு.எம்.ஐ.எஸ்., பதிவு செய்வதில் சிக்கல்
ADDED : செப் 04, 2026 03:22 AM
தேனி: கல்லுாரி மாணவர்களின் ஆதாரில் பெயர், விபரங்கள் தவறுதலாக உள்ளதால் யு.எம்.ஐ.எஸ்.,(University Management Information System) பதிவு செய்ய முடியாமல் நிர்வாகங்கள் தவித்து வருகின்றன.
தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இ.எம்.ஐ.எஸ்., பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் பிறந்த தேதி, ஆதார், முகவரி, பெற்றோர் விபரங்கள், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருக்கும். அதே போல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு யு.எம்.ஐ.எஸ்., ஐ.டி., கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஐ.டி.,யில் மாணவர்கள் குறித்த விபரங்கள், எமிஸ் பதிவு விபரங்கள் உள்ளிட்டவை இடம் பெறும். இந்த ஐ.டி., இருந்தால் மட்டுமே மாணவர்கள் அரசின் உதவித்தொகை திட்டங்கள், மடிக்கணினி திட்டம் உள்ளிட்டவற்றில் பயன்பெற முடியும்.
பேராசிரியர்கள் கூறியதாவது: சில மாணவர்களின் பெயர்கள் ஆதார், மதிப்பெண் சான்றிதழில் வெவ்வேறு எழுத்துக்களுடன் இடம் பெற்று உள்ளன. உதாரணமாக எழுத்து பிழை அதிகம் உள்ளது. சிலர் ஆதாரில் இனிஷியல் கடைசியில் உள்ளது.
மதிப்பெண் சான்றிதழில் முதலில் உள்ளது. இதனை உமிஸ் தளத்தில்பதிவு செய்யும் போது தவறு என வருகிறது.
இதனால் மாணவர்கள் திருத்தம் செய்து வந்து பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்.
சில மாணவர்கள் இவ்வாறான சிக்கல்களால் கல்லுாரிக்கே வராமல் செல்கின்றனர்.
இவ்வாறான தவறுகளை ஆதாரில் திருத்த கல்லுாரிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்றனர்.
