தி.மு.க.,வில் எம்.எல்.ஏ., 'சீட்' வாங்கி தருவதாக ரூ.1.30 கோடி மோசடி: கைது 2
தி.மு.க.,வில் எம்.எல்.ஏ., 'சீட்' வாங்கி தருவதாக ரூ.1.30 கோடி மோசடி: கைது 2
ADDED : மார் 20, 2026 03:01 AM
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட எம்.எல்.ஏ., சீட் வாங்கி தருவதாக கூறி நிர்வாகியிடம் ரூ. 1.30 கோடி பெற்று மோசடி செய்ததாக மூவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களில் இருவரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நாகலிங்கம் 50, நகர் தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி சுதா 45, பெரியகுளம் நகராட்சி 14வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். பெரியகுளம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட நாகலிங்கம் விருப்ப மனு அளித்துள்ளார்.
மார்ச் 5ல் நாகலிங்கத்தின் 'வாட்ஸ் ஆப்' ல் அழைத்து பேசிய ஒரு நபர், பெரியகுளத்தில் போட்டியிட சீட் வாங்கி தருவதாகவும், அபுதாஹிர் என்பவரிடம் முன் பணமாக ரூ.1.30 கோடி கொடுக்குமாறும் கூறினார். அதனை நம்பி நாகலிங்கம் மார்ச் 15ல் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள அபுதாஹிர் வீட்டிற்கு சென்று ரூ.1.30 கோடி கொடுத்தார். பிறகு சந்தேகமடைந்த நாகலிங்கம் மார்ச் 16ல் அபுதாஹிர் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் 'பணத்தை வடகரையைச் சேர்ந்த தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திக்கிடம் 44, கொடுத்து விட்டேன்' என அபுதாஹிர் கூறினார்.
நாகலிங்கம் அளித்த புகாரில் பேரில் அபுதாஹிர், கார்த்திக், வாட்ஸ் ஆப்பில் அழைத்ததாக கருதப்படும் ஆசிக்ராஜா 42, ஆகியோரிடம் தென்கரை போலீசார் விசாரணை நடத்தினர். இவர்களில் கார்த்திக், ஆசிக்ராஜாவை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.
புகாருக்கு உள்ளான அபுதாஹிர் பெரியகுளத்தில் 2001ல் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர் ஆவார்.
