ADDED : பிப் 03, 2026 06:24 AM
மூணாறு : பசு மீது மோதிய 'டபுள் டெக்கர்' பஸ்சின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி தப்பினர்.
மூணாறில் சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இரண்டு ' டபுள் டெக்கர்' பஸ் இயக்கப்படுகின்றன. அந்த பஸ்கள் முற்றிலும் கண்ணாடி இழை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், அதில் பயணித்தவாறு சுற்றுச்சூழலை ரசிக்கலாம்.
பழைய மூணாறில் உள்ள அரசு பஸ் டிப்போவில் இருந்து கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆனயிறங்கல் அணை வரை பஸ் சென்று திரும்புகிறது. இந்நிலையில் முதலில் இயக்கப்பட்ட 'டபுள் டெக்கர்' பஸ் நேற்று பயணிகளுடன் சென்றபோது மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் பகுதியில் எதிர்பாராத வகையில் ரோட்டின் குறுக்கே வந்த பசு மீது மோதியது. அதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி தப்பினர். பசுவும் உயிர் தப்பியது. பஸ் விபத்தில் சிக்கியபோதும், அதன் சேவை முடங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
