ADDED : மார் 20, 2026 05:30 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தினேசன் செருவாட் தெரிவித்தார்.
அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளில் ஏப்.9ல் நடக்கும் தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
அன்று காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டு பதிவு நடக்கிறது. தற்போது மாவட்டத்தில் ஆண்கள் 3,96, 802, பெண்கள் 4,06,891, இதரர் 8 என 8,03,701 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 1076 ஓட்டுச்சாவடிகள், மூன்று ஓட்டு எண்ணும் மையங்கள் ஆகியவை உள்ளன. தொடுபுழா, இடுக்கி, உடும்பன்சோலை ஆகிய தொகுதிகளின் ஓட்டுகள் இடுக்கி, பைனாவ்வில் உள்ள உண்டு, உறைவிட பள்ளியிலும், தேவிகுளம் தொகுதி ஓட்டுகள் மூணாறு அரசு மேல்நிலை பள்ளியிலும், பீர்மேடு தொகுதி ஓட்டுகள் பீர்மேடு மரியகிரி ஆங்கில மீடியம் பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், ஓட்டளிக்கும் உரிமையை உறுதி செய்யவும் பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள், போலீசார் ஆகியோரை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
வெளிப்படையாக நியாயமான முறையில் தேர்தலை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
