ADDED : மார் 10, 2026 05:11 AM

மூணாறு: காட்டு யானைகள் குடிநீர் குழாய்களை சேதப்படுத்துவதால் குடிநீர் சப்ளை முடங்கி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட், டாப் டிவிஷனில் பல குழுக்களாக காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றனர்.
பிறந்து ஓரிரு வாரங்கள் ஆன குட்டியுடன் நான்கு யானைகளை கொண்ட கூட்டம் கடந்த மூன்று வாரங்களாக முகாமிட்டுள்ளன.
தற்போது கோடை காலம் என்பதால் காடு, வனங்களில் போதிய அளவில் தீவனம் கிடைக்காதால், தேயிலை தோட்டங்களில் வலம் வருகின்றன. தேயிலை செடிகளில் படர்ந்துள்ள ஒருவகை கொடியை யானைகள் விரும்பி தின்னும். அதனால் தேயிலை தோட்டங்களில் தீவனத்தை தேடும் யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு குடிநீர் செல்லும் பிளாஸ்டிக் குழாய்களை சேதப்படுத்தி விட்டு தண்ணீரை அருந்தி வருகிறது. அதனால் அப்பகுதியில் கடந்த மூன்று வாரங்களாக அவ்வப்போது குடிநீர் சப்ளை முடங்குவதால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து உள் வனங்களுக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
