/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுகுளம், உடையகுளம், செங்குளம் துார்வாராததால் மண் மேடாகிய அவலம்; முழுமையாக நீர் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
/
சிறுகுளம், உடையகுளம், செங்குளம் துார்வாராததால் மண் மேடாகிய அவலம்; முழுமையாக நீர் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
சிறுகுளம், உடையகுளம், செங்குளம் துார்வாராததால் மண் மேடாகிய அவலம்; முழுமையாக நீர் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
சிறுகுளம், உடையகுளம், செங்குளம் துார்வாராததால் மண் மேடாகிய அவலம்; முழுமையாக நீர் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம்
ADDED : அக் 16, 2025 04:45 AM

சின்னமனூர்: சின்னமனூர், சீலையம்பட்டியில் உள்ள உடையகுளம், செங்குளம், சிறுகுளம் கண்மாய்கள் தூர்வாராததால் மண் மேடாகி உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் முழுமையாக நீரை தேக்க முடியவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
சின்னமனூரில் உடையகுளம், செங்குளம், சீலையம்பட்டி சிறுகுளம் செங்குளம் கண்மாய்கள் உள்ளது.
சீலையம்பட்டி - கோட்டூர் இடையே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே இக் கண்மாய்கள் அமைந்துள்ளது.
சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, கோட்டூர், தர்மாபுரி, பூலாந்தபுரம், சின்னமனூர் உள்ளிட்ட அருகில் உள்ள சிறிய கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கவும், நெல் பாசன வசதிக்காகவும் பயன்படுகிறது. கோடை காலங்களில் கால்நடைகளின் குடிநீர் தேவையை நிறைவேற்றுகின்றன.
சிறுகுளம் 141 ஏக்கர் பரப்பளவும், உடைய குளம், செங்குளங்கள் 150 ஏக்கர் பரப்பிலானது. இக் கண்மாய்களில் பெரும் பகுதி ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றப் பட்டுள்ளது.
எஞ்சிய நீர் பிடிப்பு பகுதியும் தூர் வாராமல் கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதர்களாக உள்ளன. இதே நிலை நீடித்தால் சில ஆண்டுகளில் கண்மாய்கள் காணாமல் போகும் நிலை உள்ளது.
கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு தூர்வார லட்சக்கணக்கில் பணம் செலவழித்தும், தொடர் பராமரிப்பு இன்றி மண் மேவி மேடாகி வருகிறது. கரைகள், மதகுகள், ஷட்டர்கள் பழுதடைந்துள்ளன. இது பற்றி விவசாயிகள் கூறியதாவது:
துார்வார நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆம்ஸ்ட்ராங், விவசாயிகள் சங்க தலைவர், சீலையம்பட்டி: சிறுகுளம் நீரின் மூலம் நெல், வாழை, தென்னை சாகுபடி நடைபெறுகிறது. இக் குளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் கரைகளை மட்டும் பலப்படுத்தினர். தற்போது கரைகளும் வலுவிழந்துள்ளன.
மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும் போது கரைகள் உடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்க பயன்படும் சிறுகுளத்தை முழுமையாக தூர் வாரி இப்பகுதி விவசாயத்திற்கு அரசு உதவிட வேண்டும். சிறுகுளம் பராமரிக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
ராஜா, விவசாயிகள் சங்க தலைவர், சின்னமனூர்: சின்னமனூரில் துவங்கி சீலையம்பட்டி வரை உடையகுளம், செங்குளங்கள் முல்லைப்பெரியாறு அணை கட்டும்போது தண்ணீரை தேக்கி வைத்து பாசன வசதியளிக்காக கட்டப்பட்டது. ஒவ்வொரு குளமும் தலா 75 ஏக்கரில் உள்ளது. ஆனால் தற்போது கணிசமான பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன.
மண்மேவி மேடானதால் முழு அளவில் நீரை தேக்கி வைக்க முடியவில்லை. மடைகள், வாய்க்கால்கள் பராமரிப்பிற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.