/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18ம் கால்வாயில் தாமதமின்றி தண்ணீர் திறப்பதால் விவசாயிகள் - மகிழ்ச்சி; கோரிக்கையை ஏற்று இன்று தண்ணீர் திறக்க உத்தரவு
/
18ம் கால்வாயில் தாமதமின்றி தண்ணீர் திறப்பதால் விவசாயிகள் - மகிழ்ச்சி; கோரிக்கையை ஏற்று இன்று தண்ணீர் திறக்க உத்தரவு
18ம் கால்வாயில் தாமதமின்றி தண்ணீர் திறப்பதால் விவசாயிகள் - மகிழ்ச்சி; கோரிக்கையை ஏற்று இன்று தண்ணீர் திறக்க உத்தரவு
18ம் கால்வாயில் தாமதமின்றி தண்ணீர் திறப்பதால் விவசாயிகள் - மகிழ்ச்சி; கோரிக்கையை ஏற்று இன்று தண்ணீர் திறக்க உத்தரவு
ADDED : அக் 01, 2025 07:37 AM
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் திட்டம் 47 கி.மீ., தூரம் கொண்டதாகும். இதனை நம்பி 4615 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் உள்ளன. இது தவிர 44 கண்மாய்களில் தண்ணீர் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதை ஒட்டி உள்ள மானாவாரி விவசாய நிலங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
ஒவ்வொரு ஆண்டும் லோயர்கேம்ப் தலைமதகுப் பகுதியில் இருந்து அக்டோபரில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் 2023, 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 2 மாதம் தாமதமாக டிசம்பர் கடைசி வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. பெரியாறு அணை நீர்மட்டம் குறைவாக இருந்த நிலையில் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் பல இடங்களில் கரைப்பகுதி சேதமடைந்தது. பல ஆண்டுகளாக தூர்வாராததால் தண்ணீர் கடந்து செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 18ம் கால்வாயை தூர் வார வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. 13 இடங்களில் பாலங்கள் சீரமைப்பு பணி, கால்வாயில் தூர் வாரும் பணியை சமீபத்தில் அதிகாரிகள் துவக்கினர். மேலும் அக்டோபர் 1ல் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கால்வாயில் தண்ணீர் திறக்க பரிந்துரை செய்து அதிகாரிகள் அரசுக்கு கடிதம் அனுப்பினர். கடந்த இரண்டு ஆண்டுகள் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்திலேயே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறும் போது: 18ம் கால்வாயை சீரமைக்க முன்கூட்டியே ரூ.12 கோடி நிதி ஒதுக்கிய போதிலும் சீரமைப்பு பணி சமீபத்தில்தான் துவங்கியது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்றனர்.
தண்ணீர் திறக்க உத்தரவு கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பி.டி.ஆர்., பெரியார் வாய்காலின் கீழ் உள்ள 5146 ஏக்கர் ஒரு போக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் 120நாட்களுக்கு 1037 மி.க.அடி நீர் அக்.,1 முதல் திறக்கவும். 18 ம் கால்வாயின் கீழ் உள்ள 4615.25 ஏக்கர் ஒரு போக பாசன நிலங்களக்கு வினாடிக்கு 96 கனஅடி வீதம் 30 நாட்களுக்கு 255 மி.க.அடி நீர் அக்.,1 முதல் நீர் இருப்பு வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப திறக்குமாறும்நேற்று அரசு செயலாளர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.