ADDED : பிப் 23, 2026 06:20 AM

போடி: போடி அருகே சிறக்காடு மலை அடிவாரத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் பற்றிய தீயால் 5 ஏக்கரில் கொட்டி இருந்த குப்பை எரிந்து சேதம் ஆனது. வெளியேறிய புகையால் கிடங்கை சுற்றி வசிப்பவர்கள் அவதியடைந்தனர்.
போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரமாகும் குப்பை போடியில் இருந்து 4 கி.மீ., துாரத்தில் உள்ள சிறக்காடு மலைஅடிவார கிராமம் அருகே உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த கிடங்கு 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அங்கு மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. நேற்று குப்பை கிடங்கில் தீ பற்றி பரவியது. அங்கிருந்து வெளியேறிய புகையால் அருகே தோட்டத்தில் வசிக்கும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் சுவாசிக்க முடியாமல் சிரமம் அடைந்தனர். போடி நகராட்சி அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போடி, தேனி, உத்தம பாளையம், கம்பம், மதுரையில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாமல் இருக்க கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கிடங்கில் பற்றிய தீயால் 5 ஏக்கர் அளவில் கொட்டி இருந்த குப்பை எரிந்து சேதமானது. நகராட்சி நிர்வாக மதுரை மண்டல இயக்குனர் முருகேசன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். தீ பற்றியதற்கான காரணம், இது போன்ற சம்பவங்களை தடுப்பது உள்ளிட்டவை பற்றி போடி நகராட்சி கமிஷனர் சுதா, பொறியாளர் குணசேகர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
