ADDED : டிச 16, 2024 02:17 AM
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் ஆழியுடன் சேர்ந்துள்ள அரச மரத்தில் நேற்று மதியம் பிடித்த தீ உடனடியாக அணைக்கப்பட்டது.
சபரிமலை சன்னிதானத்தின் முன்புறமுள்ள ஆழியில் பக்தர்கள் கொண்டுவரும் நெய் தேங்காயின் ஒரு மூடியை சமர்ப்பிக்கின்றனர். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் எரிய தொடங்குகின்ற இந்த ஆழி தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். லட்சக்கணக்கான தேங்காய் மூடிகள் இதில் போடப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் 12:00 மணியளவில் இந்த ஆழிக்கு பக்கத்தில் உள்ள அரச மரத்தின் மேற்பகுதியில் தீ பிடித்தது. இதைத்தொடர்ந்து பெரிய நடை பந்தலில் இருந்து பக்தர்கள் 18 படிகளில் ஏறி வருவது தடை செய்யப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சன்னிதானம் முன்புறம் அமைந்துள்ள தேங்காய் உலர் மையத்திலும் தீப்பிடித்து உடனடியாக அணைக்கப்பட்டது.
கூடுதல் சிலிண்டர்களுக்கு தடை
சபரிமலையில் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்கும் சப் கலெக்டர் அருண் எஸ் நாயர் தலைமையில் நேற்று உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 30 நாட்களில் அனைத்து துறையும் இணைந்து சிறப்பாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது.
சன்னிதான பகுதியில் செயற்கை சுவாசம் அளிக்கும் பயிற்சி பெற்ற சுகாதாரத்துறை ஊழியருடன் தனி மருத்துவ குழுவை நியமிக்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தேங்காய் உலர் மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு வசித்து வரும் ஊழியர்களை மாற்று இடத்தில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டது. ஓட்டல்களில் ஐந்து காஸ் சிலிண்டருக்கு கூடுதலாக ஸ்டாக் வைக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

