ADDED : ஏப் 01, 2025 05:28 AM
மூணாறு: மூணாறு நகரில் முன்விரோதத்தால் ஏற்பட்ட மோதலின்போது பணியில் இருந்த போலீஸ் உள்பட மூவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்ததான நல்ல தண்ணி எஸ்டேட் குருமலை டிவிஷனில் கடந்தாண்டு நடந்த கோயில் திருவிழாவின்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், நடையார் சவுத் டிவிஷனைச் சேர்ந்த சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்பகை முன்விரோதமாக மாறி இரு கோஷ்டியினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.
மோதல்: மூணாறு நகரில் ஜி.எச். ரோட்டில் மார்ச் 29ல் இரு கோஷ்டியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இரும்பு கம்பியால் தாக்கிக் கொண்டனர். அப்போது அதே பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட இடுக்கி ஆயுத படையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஸ்ரீஜித் 32, மோதலை தடுக்கச் சென்றபோது தாக்கப்பட்டார். தவிர மோதலில் குருமலை டிவிஷனைச் சேர்ந்த சிவா 30, விஷ்ணு 28, ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக நடையார் சவுத் டிவிஷனைச் சேர்ந்த அருண் 35, வினோத் 32, பிரவீன் 28, பிரபு 27, மிதுன் 24, ஆகியோரை மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரமனா தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

