ADDED : அக் 19, 2025 03:23 AM
போடி: நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் முல்லை பெரியாறில் கூடுதல் நீர் திறந்து விடப்பட்டது. ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் உப்புக்கோட்டை வரதராஜ பெருமாள் கோயில் அருகே உள்ள குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. கூழையனுார், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. கூழையனூர் அருகே துரைச்சாமிபுரத்தில் உலகநாதன் தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நீரில் மூழ்கின.
அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த தென்னை, நெல், மக்காச்சோளம், கொத்தமல்லி, செவ்வந்தி பூக்கள் நீரில் மூழ்கின. போடி தாசில்தார் சந்திரசேகர், போடி ஏ.பி.டி.ஓ., மலர்விழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மண் அள்ளும் இயந்திரம் மூலம் நீரில் அடித்து வரப்பட்ட மரங்கள், குப்பை அகற்றினர். குடியிருப்பு பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிமேற்கொண்டு வருகின்றனர்.