UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 08:06 PM

போடி: போடி வஞ்சி ஓடையில் குப்பை கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்படுத்துகிறது.
போடி மேற்கு பகுதியில் அமைந்து உள்ள மங்களக் கோம்பையில் துவங்கும் வஞ்சி ஓடை பரமசிவன் கோயில் கரடு, இரட்டை வாய்க்கால் ஆறு வழியாக பங்காரு சாமி, மீனாட்சியம்மன் கண்மாய் வரை உள்ளது. மழை பெய்தால் இந்த ஓடையில் தண்ணீர் வரத்து காணப்படும். துவக்கத்தில் 80 அடி அகலம் இருந்த வஞ்சி ஓடை ஆக்கிரமிப்பால் தற்போது 40 அடியாக சுருங்கி உள்ளது.
வஞ்சி ஓடை கடந்து வரும் பகுதியில் குப்பை தொட்டிகள் இல்லாததால் ஓடையில் குப்பை கொட்டுகின்றனர். கழிவு நீரை திருப்பி விடுகின்றனர். இதனால் மழைநீரும் செல்ல வழியின்றி கழிவு நீருடன் கலந்து குட்டை போல் தேங்குகிறது. சுப்புராஜ் நகர் பாலத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் ரோடு வரை கிழக்கு பகுதி திறந்த வெளியாக உள்ளதால் பிளாஸ்டிக், குப்பை, ஓட்டல் கழிவுகள், இறைச்சி கழிவுகளை ஓடையில் கொட்டுகின்றனர். சில இடங்களில் குப்பையை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வஞ்சி ஓடை மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. ஓடையில் ஆக்கிரமிப்புகள், குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
