ADDED : ஜன 19, 2026 05:55 AM

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே சிங்கராஜபுரத்தில் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஆட்டுக்கிடா முட்டு போட்டி நடந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ஆட்டு கிடாக்களுடன் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் போட்டியை துவக்கி வைத்தார். இரு கிடாக்கள் நேருக்கு நேர் முட்டி மோதும் போது எந்த கிடா பின் வாங்காமல் தொடர்ந்து மோதுகிறதோ அது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் போட்டியில் இருந்து ஒரு கிடா பயந்து ஓடினாலோ தொடர்ந்து முட்டாமல் விலகிச் சென்றாலும் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சில நேரங்களில் நடுவர்களால் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையிலானா முட்டுக்களை கடந்து நிலை குலையாமல் நிற்கும் கிடாக்கள் வெற்றி பெற்றதாகவும் இரண்டு கிடாக்கள் சம பலத்துடன் களத்தில் நின்றால் போட்டி சமனில் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற கிடா உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ராஜாளி கழுகு, ஈகிள் அணி, சிங்கராஜபுரம் பொதுமக்கள், இளைஞர்கள் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

