/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் கொட்டிய கன மழையால் பாதிப்பு கட்டப்பனை அருகே குந்தளம்பாறையில் நிலச்சரிவு
/
இடுக்கியில் கொட்டிய கன மழையால் பாதிப்பு கட்டப்பனை அருகே குந்தளம்பாறையில் நிலச்சரிவு
இடுக்கியில் கொட்டிய கன மழையால் பாதிப்பு கட்டப்பனை அருகே குந்தளம்பாறையில் நிலச்சரிவு
இடுக்கியில் கொட்டிய கன மழையால் பாதிப்பு கட்டப்பனை அருகே குந்தளம்பாறையில் நிலச்சரிவு
ADDED : அக் 19, 2025 03:26 AM

மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. கட்டப்பனை அருகே குந்தளம்பாறையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இம்மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுதும் கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி சராசரியாக மழை 52.68 மி.மீ., பதிவானது.
அதிகபட்சமாக தொடுபுழா தாலுகாவில் 85.4 மி.மீ., மழை பெய்தது. தேவிகுளத்தில் 35.4, உடும்பன்சோலையில் 82.8, பீர்மேடு பகுதியில் 28, இடுக்கியில் 31.80 மி.மீ., மழை பெய்தது.
தாழ்வான பகுதிகளை விட மலையோரப்பகுதிகள் பாதிப்புக்குள்ளாயின. குறிப்பாக நெடுங்கண்டம், கட்டப்பனை, வண்டி பெரியாறு பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
நெடுங்கண்டம் அருகே கூட்டாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் பல ரோடுகள் மூழ்கின. ரோட்டை கடக்க முயன்ற வேன், கார், டூவீலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
கூட்டாறு, தூக்குபாலம், முண்டியெருமை, பாலகிராம், தானிமூடு பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள், வர்த்தக நிறுவனங்களை மழை நீர் சூழ்ந்தது. முண்டியெருமை பகுதியில் மழை நீர் சூழ்ந்து மூழ்கிய வீட்டில் இருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டனர்.
கட்டப்பனை அருகே குந்தளம்பாறை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் குந்தளம்பாறை, வி.டி.நகர், குருசுபள்ளி பகுதிகள் பாதிக்கப்பட்டன.
அப்பகுதிகளை நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் பார்வையிட்டார். புளியன்மலை, வண்டன்மேடு ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
குமுளி, மூணாறு மாநில நெடுஞ்சாலையில் புற்றடி அருகே வாலுமேடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வண்டன்மேடு ஊராட்சியில் சாஸ்தா நடை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 80 வீடுகளை சூழ்ந்தது. வண்டி பெரியாறு ஊராட்சியில் பல பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. வண்டிபெரியாறு சுகாதார மையத்தை சூழ்ந்த மழைநீரை நேற்று தீயணைப்பு துறையினர் அகற்றினர்.
அணை திறப்பு அடிமாலி அருகே கல்லார்குட்டி அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இரண்டு முறை அதிகரிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4:10 மணிக்கு 4 ஷட்டர்கள் மூலம் 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் 5:15 மணிக்கு 160 கன அடியாகவும், மதியம் 1:00 மணிக்கு 500 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டது.
அதனால் கல்லார் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதேபோல் பாம்ளா அணையில் இருந்து நேற்று காலை 11:15 மணி முதல் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மின்தடை மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மரம் சாய்ந்து மின்கம்பிகள் சேதமடைந்தன. மூணாறை சுற்றியுள்ள எஸ்டேட்களில் மின் தடை ஏற்பட்டது.