/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதை பரிசோதனைக்கு மாதிரி விதைகள் எவ்வளவு அனுப்பலாம் வேளாண்துறை விளக்கம்
/
விதை பரிசோதனைக்கு மாதிரி விதைகள் எவ்வளவு அனுப்பலாம் வேளாண்துறை விளக்கம்
விதை பரிசோதனைக்கு மாதிரி விதைகள் எவ்வளவு அனுப்பலாம் வேளாண்துறை விளக்கம்
விதை பரிசோதனைக்கு மாதிரி விதைகள் எவ்வளவு அனுப்பலாம் வேளாண்துறை விளக்கம்
ADDED : அக் 30, 2025 04:26 AM
தேனி: விதை பரிசோதனை செய்ய எந்த பயிருக்கு எவ்வளவு விதை அனுப்ப வேண்டும் என விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் மகிஷாதேவி, சதீஷ், பரிசோதனை அலுவலர் சிவகாமி விளக்கி உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: தரமான விதைகள் பயன்படுத்தினால் நல்ல மகசூல் பெறலாம். சாகுபடி செய்யும் விதைகளில் புறத்துாய்மை, இனத்துாய்மை, ஈரப்பதம் அவசியம். சரியான ஈரப்பதம் இருந்தால் விதைகளை பூச்சி, பூஞ்சான தாக்குதல் இன்றி நீண்ட நாட்கள் சேமிக்கலாம். ஈரப்பதம் 8 சதவீதம் இருந்தால் நீண்ட நாட்களும், 10 முதல் 13 சதவீதம் இருந்தால் குறைந்த நாட்கள் சேமிக்கலாம். விதைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேளாண் விதை பரிசோதனை மையத்தில் சாகுபடி செய்வதற்கு முன் பரிசோதனை செய்வது முக்கியம்.
பரிசோதனை செய்ய வெங்காயம், காரட், காலிபிளவர், முட்டைகோஸ், தக்காளி, மிளகாய், டர்னிப், கத்தரி விதைகள் 10 கிராம், கம்பு, கேழ்வரகு, எள் 25 கிராம், நெல், கீரை, பீட்ரூட், முள்ளங்கி சணப்பு 50 கிராம். வெள்ளரி, உளுந்து, பூசணி, வெண்டி, பாசிப்பயறு, சோளம், கொள்ளு, தர்பூசணி, சூரியகாந்தி, சீனி அவரை, சுரைக்காய், பருத்தி ஒட்டு பஞ்சுநீக்கியது 100 கிராம், துவரை, தட்டைபயறு, பீர்க்கு, சோயா 150 கிராம். புடலை, பட்டாணி, பாகற்காய், ஆமணக்கு 250 கிராம், கொண்டைகடலை, கொத்தமல்லி 400 கிராம், அவரை 450 கிராம், நிலக்கடலை, மக்காச்சோளம் 500 கிராம் அனுப்ப வேண்டும்.
ஆய்வு கட்டணமாக ரூ. 80 செலுத்த வேண்டும். விதை பரிசோதனை தொடர்பான மேலும் விபரங்களுக்கு தேனி சுக்குவாடன்பட்டி வேளாண் விற்பனைகுழு வளாகத்தில் உள்ள விதைபரிசோதனை நிலையத்தை அணுகலாம் என்றனர்.

