/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவிக்கு யானைகள் வருவது அதிகரிப்பு... தடுக்கப்படுமா: ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வலியுறுத்தல்
/
சுருளி அருவிக்கு யானைகள் வருவது அதிகரிப்பு... தடுக்கப்படுமா: ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வலியுறுத்தல்
சுருளி அருவிக்கு யானைகள் வருவது அதிகரிப்பு... தடுக்கப்படுமா: ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வலியுறுத்தல்
சுருளி அருவிக்கு யானைகள் வருவது அதிகரிப்பு... தடுக்கப்படுமா: ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வலியுறுத்தல்
UPDATED : டிச 15, 2025 06:42 AM
ADDED : டிச 15, 2025 06:40 AM

கம்பம்: மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுருளிஅருவி தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வருவதை தடுக்க ஏ.ஐ., தொழில் நுட்பம் பயன்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் சுருளி அருவிக்கு அடிக்கடி யானைகள் வருவதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதிக்கிறது. இதனால் வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர். வனத்துறைக்கும் நுழைவு கட்டண வருவாய் பாதிக்கிறது. மேலும் 50 சிறு கடைகளின் உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். வண்ணாத்திப்பாறை பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி, வெட்டுக் காடு பகுதியில் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. அதே போன்று கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பகுதிகளிலும் யானைகளின் தொந்தரவு அதிகரித்துள்ளன. யானைகள் தாக்குதலால் பலர் பலியாகி உள்ளனர்.
எனவே யானைகள் சுருளி அருவி, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களுக்கு வருவதை தடுக்க ஏ.ஐ., (செயற்கை நுண்ணறிவு) தொழில் நுட்பத்தை பயன்படுத்த வனத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது யானைகள் வரும் பாதையில் இரும்பு கம்பி அல்லது உயரமான மரத்தில் கேமரா ஒன்றை பொருத்தியும், ஒலிபெருக்கி ஒன்றையும் பொருத்தி விடுவர். 50 மீட்டர் சுற்றளவிற்குள் யானைகள் வந்தால், கேமரா பதிவுகள் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு சென்று விடும். அதில் இருந்து தானியங்கி ஸ்பீக்கர்கள் மூலம் யானையை விரட்ட ஏழு விதமான ஒலிகள் ஒலிக்கப்பட, தானியங்கி சமிக்ஞைகள் ஸ்பீக்கர்களுக்கு அனுப்பப்பட்டு, ஒலி எழுப்பப்படும். இதை கேட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடும். இதன் மூலம் யானை வருவது தடுக்கப்படுகிறது.
கோவை மாவட்ட வனப்பகுதி கெம்மாரம்பாளையம், இருளர் பதி பழங்குடியினர் கிராமங்களில் யானைகள் தொந்தரவை தடுக்க இந்த வகையான ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. இதனை தேனி மாவட்டத்தில் பயன்படுத்த புலிகள் காப்பகம், வனத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

