ADDED : பிப் 08, 2026 05:57 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வரும் நிலையில், சின்னம்மை வேகமாக பரவுவதால் சுகாதார துறையினர் முன்னெச்சரிக்கை விடுத்தனர்.
இம்மாவட்டத்தில் குளிர், வெப்பம் என அடிக்கடி மாறி வரும் காலநிலையால், தொற்று நோய்கள் பரவி வருகின்றன.
குறிப்பாக டெங்கு, எலி ஆகிய காய்ச்சல் உள்பட வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகின்றன. சுகாதாரதுறை கணக்கெடுப்பில் ஜன.1 முதல் 30 வரை வைரஸ் காய்ச்சல் 5815 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தவிர டெங்கு காய்ச்சல் 22, மலேரியா 21, எலி காய்ச்சல் 10, மஞ்சள் காமாலை 6 பேர் பாதிக்கப்பட்டனர்.
எச்சரிக்கை: மாவட்டத்தில் சின்னம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. அந்நோயால் கடந்த ஒரு மாதத்தில் 41 பேர் பாதிக்கப்பட்டனர்.
அதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை விடுத்தனர்.
அந்நோய்க்கு காய்ச்சல், சோர்வு, உடல் வேதனை, தலைவலி, பசியின்மை, உடலில் கொப்புளங்கள் ஆகிய அறிகுறிகள் தென்படும்.
அதற்கு சுகாதார துறையினரின் ஆலோசனைபடி சிகிச்சை பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
