ADDED : ஏப் 25, 2026 05:47 PM
தேனி:தேர்தல் பணியால் மோசடி, சைபர் கிரைம் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டு விசாரணை சுணக்கத்தில் உள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கு தேர்தல் ஏப். 23 ல் நடந்தது. பெரும்பாலன போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் குற்றப்பிரிவு, சைபர் கிரைம், கலால் போன்ற முக்கிய பிரிவுகளில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் முதல் போலீசார் வரை தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.இதனால், அந்த பிரிவுகளில் வழக்கமாக நடைபெறும் விசாரணை மற்றும் புகார் பதிவு பாதிக்கப்பட்டன.
அவர்களுக்கு பதிலாக மற்ற பிரிவுகளைச் சேர்ந்த போலீசார் தற்காலிக பணியில் ஈடுபட்டாலும், பெயரளவில் மேற்கொண்டனர். கடந்த மார்ச், ஏப்ரலில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் குறித்து அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. குறிப்பாக வேலை வாங்கி தருவதாக பண மோசடி, ஆன்லைன் மோசடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையில் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை போலீஸ் அதிகாரிகளை அணுகினாலும் தேர்தல் பணிகளை காரணம் காட்டி புகாரை கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது தேர்தல் பணிகள் முடிந்த நிலையில், குவிந்துள்ள புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
