லோடுமேன்கள் ‛'நிதான வேலை' போராட்டம் ரேஷன் சப்ளை பாதிப்பு
லோடுமேன்கள் ‛'நிதான வேலை' போராட்டம் ரேஷன் சப்ளை பாதிப்பு
ADDED : மே 26, 2026 03:18 AM
தேனி: தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்களில் வேலை செய்யும் லோடு மோன்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் நிதான வேலை போராட்டத்தை துவங்கி உள்ளனர். இதனால் ரேஷன்கடைகளுக்கு பொருட்கள் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்கள் மூலம் அரிசி, பாமாயில், கோதுமை உள்ளிட்டவை வினியோகிக்கப்படுகிறது.
அடுத்த மாதத்திற்கு தேவையான பொருட்கள் முந்தைய மாத இறுதி வாரத்தில் அனுப்ப படும், இது முன்நகர்வு எனப்படுகிறது. நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்களில் பணிபுரியும் லோடு மேன்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் நிதான வேலை போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
ஒரு கோடவுனில் இருந்து 10 லோடு பொருட்கள் அனுப்புவது வழக்கம் எனில் நேற்று 5 லோடுகள் மட்டும் அனுப்பினர். இதனால் முன்நகர்வு பணிகள் பாதித்தது.
டி.என்.சி.எஸ்.சி., சுமைதுாக்குவோர் பாதுகாப்பு சங்க தேனி மாவட்ட பொருளாளர் மணி கூறுகையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் 6 ஆண்டுகளாக சங்க அங்கீகார தேர்தலை நடத்தவில்லை. 2025 ஜூலை 7 முதல் வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள 60 சதவீத கூலி உயர்வை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் நிதான வேலை போராட்டத்தை துவங்கி உள்ளோம். ஜூன் 6 முதல் உள்ளிருப்பு போரட்டம், ஜூன் 19 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்' என்றார்.
