/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீரில் மூழ்கியிருக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதி; ஆர்.ஓ.வி., மூலம் ஆய்வு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 12 நாட்கள் ஆய்வு, இன்று துவக்கம்
/
நீரில் மூழ்கியிருக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதி; ஆர்.ஓ.வி., மூலம் ஆய்வு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 12 நாட்கள் ஆய்வு, இன்று துவக்கம்
நீரில் மூழ்கியிருக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதி; ஆர்.ஓ.வி., மூலம் ஆய்வு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 12 நாட்கள் ஆய்வு, இன்று துவக்கம்
நீரில் மூழ்கியிருக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதி; ஆர்.ஓ.வி., மூலம் ஆய்வு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 12 நாட்கள் ஆய்வு, இன்று துவக்கம்
ADDED : டிச 22, 2025 09:38 AM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நீரில் மூழ்கியிருக்கும் அணைப்பகுதியின் பலம் குறித்து தொலைவிலிருந்து இயக்கப்படும் வாகனம் (ஆர்.ஓ.வி.) (Remotely operated vehicle) மூலம் ஆய்வு மேற்கொள்ளும் பணி இன்று (டிச.22ல்) துவங்குகிறது.
இந்த அணை நீரை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நிலங்கள் உள்ளன. அணையில் தேங்கியிருக்கும் நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள முழு அதிகாரம் இருந்த போதிலும், அணை கேரளாவில் அமைந்துள்ளதால் இரு மாநிலங்களுக்கு இடையே நீர்மட்டம் உயர்த்துவது தொடர்பான பிரச்னை தொடர்ந்து வருகிறது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பல்வேறு நிபுணர் குழுக்கள் மூலம் அணையை முழுமையாக ஆய்வு செய்த பின் 2014ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின் மொத்த கொள்ளளவான 152 அடியை தேக்கிக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் நீர்மட்டத்தை 142 அடி தேக்குவதிலும் கேரளா தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி தடுத்து வருகிறது. மேலும் 'ரூல்கர்வ்' நடைமுறையை வலியுறுத்தி மழைக் காலங்களில் நீர்மட்டத்தை உயர்த்துவதையும் தடுத்தது. இதனால் தமிழகப் பகுதியில் பல இடங்களில் இரு போகமாக இருந்த நெல் சாகுபடி ஒரு போகமாக மாறியது. இதனை தொடர்ந்து அரசு சார்பிலும் தமிழக விவசாயிகள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அணையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளை கண்காணிப்பதற்காக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அணில் ஜெயின் தலைமையில் மத்தியக் கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
இக்குழு ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறது. இக்குழுவின் ஆலோசனையின்படி நீரில் மூழ்கியிருக்கும் அணைப்பகுதியின் பலம் குறித்து ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மத்திய மண்ணியல் ஆய்வு நிலைய ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் இன்று முதல் மெயின் அணையில் நீரில் மூழ்கியிருக்கும் பாகங்களை ஆர்.ஓ.வி. மூலம் ஆளில்லா இயந்திரத்தின் உதவியுடன் ஆய்வு பணியை துவக்க உள்ளது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 1200 அடி நீளமுள்ள பெரியாறு அணை 100 அடி வீதம் 12 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகங்களாக ஆய்வு செய்யப்படும். இரண்டாம் கட்டமாக ஒவ்வொரு 100 அடி துாரமும் இரண்டாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மூன்றாம் கட்டமாக அணையின் மத்திய பாகத்தில் 10 அடி தூர அளவில் ஒவ்வொரு பாகமாக நீருக்குள் அணையின் அடிப்பாகத்தை ஆர்.ஓ.வி. இயந்திரம் மூலம் படம் எடுக்கப்படும். இதற்காக டெல்லியில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது என்றனர்.

