/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளியில் புது ஸ்டாண்ட் இன்று திறப்பு
/
குமுளியில் புது ஸ்டாண்ட் இன்று திறப்பு
ADDED : டிச 18, 2025 06:01 AM

கூடலுார்: குமுளியில் 2 ஆண்டுகளாக நடந்து வந்த புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து இன்று (டிச.18) ல் திறக்கப்படுகிறது.
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது குமுளி. ஒட்டியுள்ள கேரள பஸ் ஸ்டாண்ட் அனைத்து அடிப்படை வசதிகளுடன் உள்ளது. அதேவேளையில் தமிழகப் பகுதியில் உள்ள குமுளி பஸ் ஸ்டாண்ட் வசதியில்லாமல் ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டு வந்தன. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ரோட்டையே சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. சபரிமலை சீசனில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஐயப்ப பக்தர்கள் அதிகமாக இவ்வழியே வருகின்றனர். குமுளி வரை சென்று திரும்பும் அரசு பஸ்கள் ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் புது பஸ் ஸ்டாண்ட் கட்ட பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததது.
பணி துவக்குவதில் தாமதம் குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க 2023ல் தமிழக முதல்வர் ரூ.7.50 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். ஆனால் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணியை யார் மேற்கொள்வது என்பதில் கூடலுார் நகராட்சி, போக்குவரத்து துறை, வனத்துறை இடையே தொடர்ந்து பிரச்னை இருந்தது. துறை ரீதியாக நடந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை சார்பில் பஸ்ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.5.5 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
கட்டுமானப் பணிகளை துவக்குவதற்காக 2023 செப். 11ல் பூமி பூஜை நடந்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது. ஆனால் மின் இணைப்பு தனியாக பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா காணப்பட்டு பயன்பாட்டிற்கு வருகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலில் குமுளி சிக்கித் தவித்து வந்த நிலையில் தற்போது அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

