ஓட்டு பதிவேற்றும் செயலி மூலம் பி.எல்.ஓ.,க்கள் மாதிரி சோதனை
ஓட்டு பதிவேற்றும் செயலி மூலம் பி.எல்.ஓ.,க்கள் மாதிரி சோதனை
ADDED : ஏப் 13, 2026 06:44 PM
தேனி:ஓட்டுப்பதிவு விபரங்களை பதிவு செய்யும் செயலி மூலம் பி.எல்.ஓ.,க்கள் ஓட்டுச்சாவடிகளில் இருந்து மாதிரி பதிவேற்றம் செய்தனர்.
கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் ஓட்டுப்பதிவு விவரங்கள் அலைபேசிகள் மூலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படும். அதன் மூலம் பதிவான வாக்குகள் விபரங்கள் வெளியிடப்படும். துல்லியமான ஓட்டுப்பதிவு விபரம் நள்ளிரவில் அல்லது மறுநாள் வெளியிடப்படும். அதனை தவிர்க்க தேர்தல் ஆணையம் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்காக பிரத்யேக செயலியை வடிவமைத்துள்ளது. அதில் 2 மணிநேரத்திற்கு ஒரு முறை பதிவான ஓட்டுப்பதிவு விபரம் பதிவிட அறிவுறுத்தி உள்ளது. இந்த செயலி சரிவர இயங்குகிறதா என மாவட்டத்தில் நேற்று சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இதற்காக பி.எல்.ஓ.,க்களுக்கு செயலி பதிவிறக்கம் செய்து தரப்பட்டது. அவர்கள் தங்கள் பாகத்திற்குறிய ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 2 மணிநேரத்திற்கு ஒரு முறை பதிவாகும் ஓட்டுகள் போன்று எண்ணிக்கை பதிவு செய்தனர்.
அலுவலர்கள் கூறுகையில், 'அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் இணையதள வசதி சரியாக உள்ளதா, செயலி இயங்குகிறதா என சோதனை செய்யப்பட்டது. இணைய வசதி இல்லாத பகுதிகளில் எஸ்.எம்.எஸ்., மூலம் இயங்கும் வகையிலும் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
