தேர் சுத்தம் செய்யும் பணி போலீசாரால் தாமதம்: திரும்பி சென்ற பக்தர்கள்
தேர் சுத்தம் செய்யும் பணி போலீசாரால் தாமதம்: திரும்பி சென்ற பக்தர்கள்
ADDED : மார் 26, 2026 07:54 PM
பெரியகுளம்:பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் தேர் நிலையத்தை சுற்றி நிறுத்தி ஆக்கிரமித்து விபத்து வாகனங்களை போலீசார் நிறுத்தி உள்ளதால் தேர் சுத்தம் செய்யும் பணி தாமதமாகிறது.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது.பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, மார்ச் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் இரவு 7 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் மார்ச் 31ல் நடக்கிறது. தேரோட்டத்தை பார்க்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். தேரினை சுத்தம் செய்தல், புதிதாக தொம்பைகள் கட்டுவது உள்ளிட்ட அலங்கரிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. ஆனால்,தேர் நிறுத்தி உள்ள நிலையத்தை சுற்றி தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு, விபத்து உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தேரினை சுத்தம் செய்யும் பணி தாமதமாகிறது.
திரும்பி சென்ற பக்தர்கள்
தேரினை சுத்தம் செய்ய சில பக்தர்கள் தேர்நிலையத்திற்கு வந்தனர். ஆனால், தேர் அருகே செல்ல இயலாதவாறு ஆக்கிரமித்து விபத்தில் சிக்கிய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பக்தர்கள் சுத்தம் செய்யாமல் திரும்பிச் சென்றனர். தேர்நிலையைச் சுற்றி நிறுத்தி உள்ள வாகனங்களை அகற்ற பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
