/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெருநாய்கள் புதைத்த இடத்தில் போலீசார் ஆய்வு
/
தெருநாய்கள் புதைத்த இடத்தில் போலீசார் ஆய்வு
ADDED : ஆக 06, 2025 09:08 AM
மூணாறு, : மூணாறில் தெருநாய்களை கொன்று புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி போலீசார் நடத்திய ஆய்வில் நான்கு உடல்கள் சிக்கின.
மூணாறு நகரில் சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் திடிரென மாயமாகின. அவற்றை ஊராட்சி நிர்வாகம் கொன்று புதைத்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக தொடுபுழாவில் வசிக்கும் விலங்கு மீட்பு குழு கீர்த்திதாஸ் கேரள முதல்வர் பினராயிவிஜயன், போலீஸ் உயர் அதிகாரிகள், விலங்கு பராமரிப்புதுறை அதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்டதாக கூறியிருந்தார்.
மூணாறு போலீசார் ஊராட்சி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்து, கொல்லப்பட்ட நாய்களை ஏற்றிச் சென்ற மினி லாரியை கைப்பற்றினர்.
தோண்டி எடுப்பு: கல்லார் எஸ்டேட் செல்லும் ரோட்டில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் நாய்களை கொன்று புதைத்தாக தெரிய வந்ததால், அப்பகுதியில் மூணாறு இன்ஸ்பெக்டர் பினோஜ்குமார் தலைமையில் போலீசார்நேற்று சம்பந்தப்பட்ட இடத்தில் மண் அள்ளும் இயந்திரம் கொண்டு தோண்டி ஆய்வு நடத்தினர். நாய்களின் நான்கு உடல்கள் சிக்கின. அவற்றை அதே இடத்தில் கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை நடத்தினர்.
உடல் உள் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதால், அதன் அறிக்கையை பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதே சமயம் தெருவில் இறந்து கிடந்த நாய்களை மினி லாரியில் கொண்டு சென்றதாக ஊராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.