ADDED : அக் 08, 2025 07:32 AM
கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
தேனி: மாணிக்காபுரம் ராஜவேல். இவரது மனைவி மேனகா 28. குடித்து விட்டு மனைவியிடம் ராஜவேல் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில் தெருவில் வைத்து மனைவியை திட்டி, கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். காயமடைந்த மேனகா 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். வீரபாண்டி போலீசார் கணவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
சிறுவன் தற்கொலை
தேனி: அல்லிநகரம் கக்கன்ஜி நகரை சேர்ந்த 15 வயது சிறுவன். உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் தேனி அருகே உள்ள தனியார் கேட்டரிங் கல்லுாரியில் படித்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொத்தனாருக்கு கத்திக்குத்து
தேனி: பூதிப்புரம் சுப்பிரமணி கோயில் தெரு கொத்தனார் முத்துபாண்டி 34. அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரிடம் ஒருமாத்திற்கு முன் ரூ.15 ஆயிரம் கடனாக வாங்கி இருந்தார். கடனை சில நாட்களுக்கு முன் திருப்பி வழங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துப்பாண்டியிடம், மாரீஸ்வரனின் தந்தை செல்லபாண்டியன் கடனை திருப்பி தருமாறு கூறி தாக்கினார். மாரீஸ்வரனிடம் கடன் தொகையை தந்து விட்டதாக முத்துப்பாண்டி கூறிய போது தகராறு ஏற்பட்டது. அங்கு கத்தியுடன் வந்த மாரீஸ்வரன், தந்தையிடம் எப்படி தகராறு செய்யலாம் எனக் கூறி முத்துப்பாண்டியை குத்தினார். அருகில் இருந்தவர்கள் சண்டையை விலக்கினர். காயமடைந்த முத்துப்பாண்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பாம்பு கடித்து விவசாயி பலி
தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா நல்லகருப்பன்பட்டி கிழக்கு தெரு விவசாயி கோவிந்தராஜ் 62. வீட்டிற்கு வெளியே சைக்கிளை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு கடித்தது. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கத்திக்குத்து தகராறு: நால்வர் மீது வழக்கு
பெரியகுளம்: டி.கள்ளிப்பட்டி சாத்தணன் அம்பலம் தெரு எஸ்.ராமசுப்பிரமணி 50. அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் எம்.ராமசுப்பிரமணியன் 55. இருவருக்கும் இடையே அதே பகுதியைச் சேர்ந்த வாரிசு இல்லாத கந்தசாமியின் வீட்டினை உரிமை கொண்டாடுவது சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் எஸ்.ராமசுப்பிரமணியை, எம்.ராமசுப்பிரமணியன் கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தினார். தென்கரை போலீசார் எம்.ராமசுப்பிரமணியன், அவருக்கு உதவிய உறவினர்கள் பார்த்தசாரதி 25, சுகன்யா 45, ஆகிய மூவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இப்பிரச்னையில் எம்.ராமசுப்பிரமணியன், 'வீடு தனக்கே வேண்டும் என, எஸ்.ராமசுப்பிரமணி, தன்னையும், தனது தாயார் முத்துமாரியம்மாளை அவதுாறாக பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார் என, புகார் அளித்தார். அதன்படி தென்கரை போலீசார் எஸ்.ராமசுப்பிரமணி மீது கொலை மிரட்டல் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மனைவி மாயம்: கணவர் புகார்
கடமலைக்குண்டு: தேக்கம்பட்டி சக்திவேல் 35. இவர் தனது மனைவி பிரியா 25, குழந்தையுடன் அக்.2ல் தேக்கம்பட்டியில் நடந்த திருவிழாவிற்கு இரவில் சென்றார். இரவு 11:00 மணிக்கு துாங்கிய தன் குழந்தையை மட்டும் துாக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். வாதியின் மனைவி மட்டும் திருவிழாவில் வேடிக்கை பார்த்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. மனைவி மாயமானது குறித்து சக்திவேல் புகாரில் கண்டமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரோட்டை சேதப்படுத்திய இருவர் கைது
கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை ஒன்றியம் வருஷநாடு அருகே பாலசுப்பிரமணியபுரம் ரோடு முதல் கவுண்டர் குடிசை பகுதி வரை முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் புதிய ரோடு புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. ஜல்லி கற்கள் கலவை கொட்டப்பட்டு சமப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காமராஜபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் 55, வனராஜ் 52, ஆகியோர் ரோடு அமைக்கும் இடம் பிரச்சினைக்குரிய இடம் என்று தெரிவித்து பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஜல்லி கற்களுடன் அமைக்கப்பட்ட ரூ.75 ஆயிரம் செலவிலான ரோட்டை மண் அள்ளும் இயந்திரம் மூலம் சேதப்படுத்தினர். கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றிய பி.டி.ஓ., மாணிக்கம் புகாரில் வருஷநாடு போலீசார் ரோட்டை சேதப்படுத்திய மணிகண்டன், வனராஜ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான தங்கம்மாள்புரம் உதயபாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
'போக்சோ'வில் ஒருவர் மீது வழக்கு
போடி: பொட்டல்களம் நந்தகுமார் 25. இவர் கேரளா சூரியநெல்லி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி உள்ளார். காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் செய்தார். தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். போடி அனைத்து மகளிர் போலீசார் நந்தகுமார் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் பெயின்டர் காயம்
தேனி: விருதுநகர் மாத்துார் அமுதன் 24. தேனி கே.கே.பட்டியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இரு நாட்களுக்கு முன் டூவீலரில் சொந்த ஊர் சென்றார். குன்னுார் வைகை ஆற்றுப்பாலம் அருகே சென்ற போது எதிரே பெரியகுளம் அழகாபுரி சிந்தால்புரம் வீரகாமு, தான் ஓட்டி வந்த காரை சமிக்கை வழங்காமல் 'யூ டர்ன்' செய்தார். இதில் டூவீலரில் கார் மோதி விபத்து நடந்தது. காயமடைந்த அமுதன் அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.